இந்தியா

திரிணமூல் - பாஜகவினர் இடையே மோதல்: மேற்கு வங்கத்தில் 15 வாக்குச் சாவடிகளின் மறுவாக்குப் பதிவு நிலவரம் என்ன?

வெற்றி மயிலோன்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 15 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே இன்று மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி இந்த 15 வாக்குச் சாவடிகளில் 86% வாக்குப் பதிவு நடந்துள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் பச்சிம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளிலும், இன்று காலை மறு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த 15 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சூழலில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, மக்ரஹத் பச்சிம் தொகுதியில் 86.11 சதவீதமும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 87.60 சதவீதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது

இதனிடையே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 'ஸ்ட்ராங் ரூம்’களில் முறைகேடுகள் நடைபெற்றதாக இன்று திரிணமூல் கட்சி குற்றம்சாட்டியதன் மூலம் மற்றொரு சர்ச்சை எழுந்தது.

குதிராம் அனுஷிலன் கேந்திராவில் உள்ள பாதுகாப்பு அறையில், தபால் வாக்குகள் அங்கீகாரம் இன்றி பிரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் மீது திரிணமூல் கட்சி புகார் அளித்துள்ளது.

இதேபோல், ஒரு பாதுகாப்பு அறை அனுமதி இன்றி திறக்கப்பட்டதாக பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT