இந்தியா

எம்பரர் விமான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்

பிடிஐ

எம்பரர் விமான கொள்முதல் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த எம்ப்ரேயர் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,400 கோடியில் 3 கண்காணிப்பு விமானங்கள் வாங்க 2008-ம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2011-ம் ஆண்டு ஒரு விமானத்தையும், 2013-ம் ஆண்டு 2 விமானங்களை யும் இந்தியாவிடம் எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்படைத்தது.

இதேபோல சவுதி அரேபியா, டொம்னிக்கன் குடியரசு, மொசாம் பிக் ஆகிய நாடுகளிலும் எம்பரர் நிறுவனம் ஒப்பந்தங்களைப் பெற்றது. 4 நாடுகளிடமும் ஒப்பந்தங் களைப் பெற அந்த நிறுவனம் லஞ்சம் அளித்தது தெரியவந்தது. எம்ப்ரேயர் நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் இருந்து லஞ்ச பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதை எப்பிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர ரூ.1,371 கோடியை அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதமாக செலுத்த எம்பரர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்தத் தொகையை அமெரிக்கா, பிரேசில் நாடுகள் பகிர்ந்து கொள்ள உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எம்பரர் விமான கொள்முதல் ஊழல் குறித்து சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்க நீதிமன்றத்தில் எம்ப்ரேயர் நிறுவன வழக்கு முடிவுக்கு வருவதால் இந்தியாவில் சிபிஐ விசாரணை நிறுத்தப்படாது. அமெரிக்க சட்டங்களும் இந்திய சட்டங்களும் வெவ்வேறானவை. எம்பரர் ஊழல் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தும்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஊழலில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வகை செய்யும் கொள்கை அடுத்த மாதத்தில் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT