இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணியாற்றும் மெகமூத் அக்தர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக இந்தியாவில் தொடர்ந்து உளவு பார்த்து வந்ததாக போலீஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அவரை மத்திய அரசு, 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பவும் முடிவு செய்தது. இதற்கு அடுத்த சில மணி நேரங்களில், பாகிஸ்தான் அரசும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய தூதரக அதிகாரியான சுர்ஜீத் சிங் என்பவரை பாகிஸ்தானுக்கு வேண்டப்படாத நபராக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்திய தூதர் கவுதம் பம்பவாலேவை வெளியுறவுச் செயலாளர் அய்சாஸ் சவுத்ரி அழைத்து இத்தகவலை தெரிவித்துவிட்டார். தூதரக அதிகாரி சுர்ஜீத் சிங், அக்டோபர் 29-ம் தேதிக்குள் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானை விட்டு வெளியேற கேட்டுக்கொண்டுள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ‘இந்திய அதிகாரியின் நடவடிக்கைகள், வியன்னா தீர்மானம் மற்றும் ராஜ்ஜிய நடைமுறைகளுக்கு முரணாக அமைந்திருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது’ என, மேலோட்டமான காரணத்தை பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் முன்வைத்தார்.பாகிஸ்தானின் இந்த பழிக்குப்பழி நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டெல்லியில் நேற்று
செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இந்திய அதிகாரி மீதான நடவடிக்கைக்கு நியாயமான விளக்கத்தை பாகிஸ்தானால் கூறமுடியவில்லை. ராஜ்ஜிய நடைமுறைகளுக்கு உகந்ததாக இல்லை என்ற முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற, ஒரு குற்றச்சாட்டைத் தவிர, வேறெதையும் பாகிஸ்தான் அரசால் தெரிவிக்க முடியவில்லை.
இந்தியாவில் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட மெகமூத் அக்தர் மீது மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் எதிரொலியாகவே இதனை பார்க்கமுடிகிறது. இதன்மூலம், எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான செயல்களை பாகிஸ்தான் இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது உறுதியாகிறது’ என்றார்.-