இந்தியா

ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம்: பாஜக எம்.பி. வினய் கட்டியார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் வினய் கட்டியார் வலியுறுத்தியுள்ளார்.

உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ராமர் கோயில் விவகாரத்தை எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தி இருதினங் களுக்கு முன் ‘தி இந்து’வில் வெளி யானது. இந்தப் பிரச்சினையை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மட்டும் தொடர்ந்து எழுப்பி வருகிறார். இவருக்கு அடுத்த படியாக, உ.பி. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பின், பாஜகவின் முதல் தலைவரான வினய் கட்டியார் எழுப்பியுள்ளார். விஷ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தளத்தின் நிறுவனராகவும் கட்டியார் உள்ளார்.

இது குறித்து லக்னோவில் வினய் கட்டியார் பேசும்போது, “ராமர் கோயில் கட்டப்பட வேண் டும் என சுப்பிரமணியன் சுவாமி மட்டும் கூறவில்லை. பிரம்மாண்ட ராமர் கோயில் விரைந்து அமைக் கப்பட வேண்டும் என்பது ஒவ் வொரு ராம பக்தரின் விருப்பம் ஆகும். இது அமையும் வரை நாம் அமைதியாக இருக்கப் போவ தில்லை. இது விரைவில் அமைக் கப்படும் என மத்திய அரசு உறுதி அளிக்கவேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் நம் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் கோயில் கட்டுவதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்பட வேண்டும். மாநிலங்களவையிலும் நமக்கு பெரும்பான்மை கிடைத் தால் அங்கும் இந்த மசோதா கொண்டு வருவோம் என்ற செய்தி பரவ வேண்டும். ராமர் கோயில் கட்டுவது என்பது ஏற்கெனவே பாஜகவின் கொள்கைகளில் இடம் பெற்றுள்ளது” என்றார்.

கட்டியார் தனது உரைக்குப் பிறகு ராமர் கோயில் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “இது போன்ற விஷயங்களில் காலநிர்ண யம் எதுவும் செய்ய முடியாது. ராமர் கோயில் தொடர்பாக அரசிடம் மூன்று வாய்ப்புகள் உள்ளன. நீதிமன்ற அனுமதி பெறுவது, இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற் றுவது ஆகியவை இந்த வாய்ப்பு களாகும். இந்த நிலையில் சட்டம் இயற்றும் வாய்ப்பை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்” என்றார்.

அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து வினய் கட்டியார் கூறும்போது, “ராமர் கோயில் கட்ட அரசு முயற் சிக்க வேண்டுமே தவிர அருங் காட்சியகம் என்ற பெயரில் ‘லாலி பாப்’ தர முயற்சிக்கக் கூடாது” என்றார்.

உ.பி. தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பட்டியலில் வினய் கட்டியார் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான கேள்விக்கு அவர், “பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி இத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT