இந்தியா

பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு: காங்., பாஜக பார்வை என்ன?

செய்திப்பிரிவு

பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்தின் கேள்விப் பட்டியலுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை புறக்கணிப்பதாக கூறியுள்ள இந்த அமைப்புகள், முஸ்லிம்களுக்கு எதிரான போரை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக கூறியுள்ளன.

இந்த எதிர்ப்பு குறித்த காங்கிரஸ், பாஜக பார்வை:

காங்கிரஸ் மூத்த தலை வரும் முன்னாள் சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறும்போது, "பல்வேறு சமூகத்தினர் தனிச் சட்டங்களுக்கு உட்பட்டு வாழும் நாடுகளில் பொது சிவில் சட்டத்தை நடை முறைப்படுத்துவது கடினம். இதே தன்மை கொண்ட இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை" என்றார்.

பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறும்போது, "இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களிடம் சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டு பொதுக்கருத்து எட்டப் படும். பிறகு இக்கருத்து உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும்.

பல்வேறு சர்வதேச பிரகடனங்கள், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளில் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது முற்போக்கான சமூகத்தை கட்டமைப்பதற்கான முயற்சி ஆகும்" என்றார்.

எதிர்ப்பது ஏன்?

முஸ்லிம்கள் பின்பற்றி வரும் தலாக் விவாகரத்து நடைமுறை, பெண்களுக்கு சொத் துரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விப் பட்டியலை சட்ட ஆணையம் கடந்த 7-ம் தேதி வெளியிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரிய பொதுச் செயலாளர் வாலி ரஹ்மானி, ஜாமியத்-உலேமா-இ-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: பொது சிவில் சட்டத்தால் அனைத்து மக்கள் மீது ஒரே சாயம் பூசப்படும். இதனால் நாட்டின் பன்முகத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

'தலாக்' நடைமுறை

பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள் நம் நாட்டில் வசிக்கின்றனர். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அனைத்து மக்கள் மீதும் ஒரே சாயம் பூச முயற்சி மேற்கொள்ளப்படும். இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

'தலாக்' நடைமுறை ரத்து செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய சமூகத்தை விட பிற சமூகங்களில் அதிக விவாகரத்து காணப்படுகிறது. குறிப்பாக இந்து சமூகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விவாகரத்து விகிதம் அதிக அளவில் உள்ளது.

முஸ்லிம் தனிச்சட்டத்தில் உள்ள குறை பாடுகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மத்திய அரசு தனது நடவடிக்கையை திரும்பப் பெறும் என நம்புகிறோம். அவ்வாறு திரும்பப் பெறாவிடில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிப்போம். தற்போது இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறோம்.

இவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT