நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ள விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ப்ரீத்தி ஜிந்தா விஷயத்தில் நிழல் உலக தாதாவிடம் இருந்து தங்களுக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக வாடியா குழுமம் போலீஸில் புகார் தெரிவித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா இருவரும் முன்பு காதலர்களாக இருந்தவர்கள். இருவருமே கிங்ஸ் லேவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாகவும் இருப்பவர்கள்.
மே மாதம் 30ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடந்தபோது, மைதானத்தில் வைத்து தன்னிடம் நெஸ் வாடியா பாலியல்ரீதியாக தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும், மோசமான வார்த்தைகளில் பேசியதாகவும் ப்ரீத்தி ஜிந்தா போலீஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு ஆதரவாக நிழல் உலக தாதாவிடம் இருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக வாடியா குழுமம் சார்பில் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நெஸ் வாடியாவின் தந்தையும் வாடியா குழுமத்தின் தலைவருமான நுஸ்லி வாடியாவின் செயலாளரின் செல்போனுக்கு வந்த அழைப்பில் நிழல் உலக தாதா ரவி புஜாரி என்று ஒருவர் பேசினார்.
"ப்ரீத்தி ஜிந்தாவை தொந்தரவு செய்யக் கூடாது. நான் கூறியதை வாடியாவிடம் சொல்லிவிடுங்கள். இதனால் உங்கள் தொழில்களுக்கு பிரச்சினை ஏற்படும்" என்று அந்த நபர் மிரட்டினார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மிரட்டல் எஸ்எம்எஸ் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் வாடியாவின் செயலாளரின் பெயரை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அந்த தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது எதைக் கண்டறிய குற்றப் பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.