இந்தியா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதா?- டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது பாஜக பாய்ச்சல்

பிடிஐ

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை நம்பி, நமது ராணுவத்தின் வீரத்தைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பாஜக அறிவுறுத்தியுள்ளது.

உரியில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 7 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றன.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இருதினங்களுக்கு முன் தனியார் ‘டிவி’க்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தீவிரவாத முகாம்களை அழிக்க துல்லிய தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டுகிறேன். அதே சமயம் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளும், ஐ.நா. பார்வையாளர்கள் குழுவின் அறிக்கையும் தாக்குதல் நடத்தப் பட்டதற்கான நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பு கின்றன. இது தொடர்பாக பிரதமர் ஆதாரங்களை வெளியிட்டு பாகிஸ்தானின் முகத்திரையைப் கிழித்தெறிய வேண்டும்’’ என்றார்.

கேஜ்ரிவாலின் இந்த சந்தேகத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

நமது ராணுவத்தின் தியாகம், வீரம், அசகாய தலைமை ஆகிய வற்றை எவ்விதத்திலும் சிறுமைப் படுத்தக் கூடாது. பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தை நம்பி, கேஜ்ரிவால் இப்படி கேள்வி எழுப்பி யிருப்பது மிகுந்த மனவலியை தருகிறது. பாகிஸ்தானில் இருக்கும் ஊடகங்கள் எதை வேண்டுமென்றா லும் தெரிவிக்கட்டும்.

இந்தியாவில் உள்ள ஒரு மாநில முதல்வர் அந்தச் செய்திகளை எப்படி நம்பலாம். இந்திய ராணு வத்தைச் சந்தேகிக்கும் வகையில் எப்படி ஆதாரத்தைக் கேட்கலாம். அரசியலில் நாம் வேறுபட்டவர் களாக இருக்கலாம். ஆனால் அந்த வேறுபாடு நமது ராணுவத்தைக் காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT