இந்தியா

மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் செல்போன்களுக்கு தடை

பிடிஐ

தொடர்பு சாதனங்களை ‘ஹேக்’ செய்து முக்கியத் தகவல்கள் கசிந்து விட வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஒரு முடிவில், மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் அமைச்சர்கள் செல்போன்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தலைமைச் செயலகம் சமீபமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் தனி உதவியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்த அறிவிக்கையில், “ஸ்மார்ட் போன்கள், செல்போன்கள் ஆகியவற்றுக்கு அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக் குழு கூட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர்களுக்கு அவர்களின் தனி உதவியாளர்கள் விளக்குமாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முகமைகள் முக்கிய அமைச்சர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக எச்சரித்ததையடுத்து, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பிலிருந்து முதன்முறையாக இத்தகைய அறிவுறுத்தல் செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக அமைச்சர்கள் செல்போன்களை கொண்டுவருவதற்கு அனுமதி இருந்தாலும், பெரும்பாலும் அது ‘சைலண்ட்’ நிலையிலோ அல்லது சுவிட்ச் ஆஃப் நிலையிலோதான் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT