இந்தியா

முலாயமுக்கு பல் வலி; கட்சிக்குள் பூசல் இல்லை- ஷிவ்பால்

பிடிஐ

சமாஜ்வாதி கட்சிக்குள் எவ்வித பூசலும் இல்லை என கட்சியின் மூத்த தலைவரும் முலாயம் சிங் யாதவின் சகோதரருமான ஷிவ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவை இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார் ஷிவ்பால் யாதவ். அவரைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவும் சென்றார்.

நேற்றைய சர்ச்சையைத் தொடர்ந்து இன்று நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு குறித்து ஷிவ்பால் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சிக்குள் எவ்வித பூசலும் இல்லை. முலாயம் சிங் யாதவ் உத்தரவுப்படியே இங்கு எல்லாம் நடக்கும். நாங்கள் அனைவருமே அவருக்கு துணை நிற்போம்.

முலாயம் சிங் யாதவுக்கு கடுமையான பல் வலி ஏற்பட்டுள்ளது. அதன் நிமித்தமாக அவரை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்தேன். வேறு ஒரு பிரச்சினையும் இல்லை" என்றார்.

முன்னதாக கட்சி அலுவலகத்துக்குச் சென்ற ஷிவ்பால் யாதவ், நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங் அமைச்சருடன் ஆலோசித்தார்.

ஒரே நேரத்தில் ஷிவ்பால் யாதவும், அகிலேஷ் யாதவும் கட்சித் தலைவரைச் சந்திக்க வந்ததால் இரு தரப்பு ஆதரவாளர்களும் முலாயம் வீட்டின் முன் திரண்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை), உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ் வாதி கட்சிக்குள் வாரிசு அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியது. கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால், அவரது ஆதரவாளர்கள் சதாப் பாத்திமா, நராத் ராய், ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை நேற்று முன்தினம் முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

மூத்தத் தலைவர் அமர்சிங்கின் ஆதரவாளரான நடிகை ஜெயப்பிரதாவின் மாநிலத் திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பதவியையும் அகிலேஷ் பறித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கட்சித் தலைவர் முலாயம் சிங், அகிலேஷின் தீவிர ஆதரவாளரான ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்க உத்தரவிட்டார். வாரிசு அரசியலால் ஏற்பட்ட இந்த உட்கட்சி பூசலால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே சமாஜ்வாதி கட்சி இரண்டாக உடையக்கூடும் என தகவல்கள் வெளியாகின. இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை இச்சர்ச்சை கிளப்பிய நிலையில் சர்ச்சைக்கு காரணமாக ஷிவ்பால் யாதவ், அகிலேஷ் யாதவ் இருவருமே இன்று கட்சித் தலைவரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT