டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாகிஸ்தான் அதிகாரி போலி ஆதார் அட்டையை காட்டி தப்பிக்க முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை ஆணையர் (குற்றப் பிரிவு) ஆர்.எஸ்.யாதவ் மேலும் கூறியதாவது:
மெகமூது அக்தரை பிடித்த பின்னர் அவர் யார் என்று போலீஸார் கேட்டனர். அப்போது ஆதார் அடையாள அட்டையை காட்டி உள்ளார். அதில், டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் வசிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஆதார் அட்டையில் அவரது பெயர் மெகபூப் ராஜ்புத் என்று இருந்தது.
ஆனால், விசாரணையில் ஆதார் அட்டை போலி என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது, பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிவதை அக்தர் ஒப்புக் கொண்டார். உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு டெல்லி போலீஸார் விவரம் கேட்டனர்.
அதன்பின், பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டு அக்தர் பற்றி மத்திய வெளியுறவுத் துறை விசாரித்துள்ளது. அப்போது, பாகிஸ்தான் தூதரகத்தில் மெகமூது அக்தர் என்பவர் பணிபுரிவதாக அவர்கள் கூறியுள்ளனர். அதன்பின்னரே அவரது உண்மையான அடையாளம் உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இணை ஆணையர் யாதவ் கூறினார்.
இதற்கிடையில் அக்தருக்கு உளவு பார்த்த மவுலானா ரம்ஸான், சுபாஷ் ஜாங்கீர் ஆகியோரை கைது செய்த போலீஸார் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரிடம் மேலும் விசாரித்தால் பல தகவல்கள் தெரியவரும் என்று டெல்லி போலீஸார் கூறினர்.