உ.பி.யின் வாரணசியில் பாலம் உடைந்ததாகக் நேற்று கிளம்பிய புரளியால் 25 உயிரிழப்பு ஏற்பட்டு 100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இது அப்பகுதியின் ஜெய் குருதேவ் எனும் ஆன்மீகத் தலைவரின் விழாவிற்காக அந்த சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த போது ஏற்பட்டுள்ளது.
உபியின் தெய்வீக நகரமான வாரணாசியை ஒட்டி உள்ள சண்டவுலியில் அமைந்துள்ளது டொம்ரி கிராமம். இங்கு ஜெய் குருதேவ் எனும் ஆன்மீகத் தலைவரின் பெயரில் ஒரு ஆஸ்ரமம் அமைந்துள்ளது. இதில் நேற்று துவங்கி இருதினங்களுக்காக ’ஷோபா யாத்திரா( யாத்திரை) எனும் பெயரில் ஒரு ஆன்மீக கூட்டம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொள்ள வேண்டி ஆயிரக்கணகான பக்தர்கள் வந்து குவியத் துவங்கினர். இவர்கள் வாரணாசியில் உள்ள கங்கை நதியின் மீது அமைந்த ராஜ்காட் பாலத்தை கடந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இக்கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்படப் பொதுமக்கள் திரளத் துவங்கினர். இதற்காக அவர்கள் நடைபயணமாக அப்பாலத்தை கடந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மதிய நேரம் என்பதால் அடித்த வெயிலின் கடுமையால் ஒரு வயதான மூதாட்டி மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்டு திடீர் நெரிசலில் பாலம் உடைந்து விட்டதாக புரளி கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பதட்டமாக ஓடத் துவங்க கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். சுமார் நூறு பேர் படுகாயம் அடைந்தமையால் வாரணாசியின் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
வாரணாசி மற்றும் சண்டவுலியை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது அமைக்கப்பட்ட இந்த பாலம், சுமார் 100 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இரண்டு அடுக்குகள் கொண்டதன் கீழ் பகுதி பாலத்தில் ரயில்கள் மட்டும் ஓட பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேல் பகுதி பாலத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும்படி உள்ளது. இதன் இருபுறங்களிலும் கூட்டத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இடையில் ஊர்ந்தபடி சென்ற வாகனங்களுடன் சேர்த்து பொதுமக்களும் மெல்ல நகர்ந்துள்ளனர். இவர்களுக்கு தேவையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த ஆஸ்ரமம் மற்றும் உபி அரசு தரப்பில் செய்யப்படாதது விபத்திற்கான காரணம் ஆகும். ஆனால், இதை இருதரப்பினரும் ஏற்க மறுத்து ஒருவர் மீது ஒருவர் குறை கூறத் துவங்கி உள்ளனர்.
இது குறித்து உபி மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜாவீத் அகமது கூறுகையில், ‘இந்த கூட்டத்தில் வெறும் 5000 பேர் கலந்து கொள்வதாக அரசிடம் கூறி அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், வந்தவர்கள் அதை விடப் பன்மடங்கு அதிகமானவர்கள். இதனால் பாலத்தில் எற்பட்ட போக்குவரத்து நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் முக்கியக் காரணம் புரளியா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஜெய் குருதேவ் ஆஸ்ரமத்தின் செய்தி தொடர்பாளரான ராஜ் பகதூர் கூறுகையில், ‘பொதுமக்கள் அதிகமாக வந்தமையால் அவர்களை திரும்ப செல்லக் கூறி போலீஸார் கூறினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் கிளம்பிய புரளி விபத்தாகி உள்ளது. இதற்கு அரசு நிர்வாகத்தின் குறைபாடுகள் முக்கியக் காரணம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
ராஜ்காட் பாலத்தின் விபத்தின் மீது பிரதமர் நரேந்தர மோடி மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். இவரது மக்களவை தொகுதியாக வாரணாசி உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களுக்காக தலா ரூபாய் இரண்டு லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரமும் அளிப்பதாக அறிவித்துள்ளார். இதுபோல், ஜெய் குருதேவ் ஆஸ்ரமத்தினருக்கு கடந்த நான்கு மாதங்களில் ஏற்படும் இரண்டாவது துயர சம்பவம் ஆகும். இதற்கு அவர்களது மத்துராவின் ஆஸ்ரமம் ஆக்கிரமிக்கப்பட்டதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் உபி அரசு காலி செய்ய முற்பட்டது. ஜுன் 2-ல், ஆஸ்ரமத்தினர் மற்றும் போலீஸாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் உயிரிழந்தனர்.