இந்தியா

9 விநாடிகளில் தகர்க்கப்பட்ட நொய்டா இரட்டைக் கோபுரம்: சரிந்து விழுந்த தருணம்

செய்திப்பிரிவு

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (ஆகஸ்ட் 28) தகர்க்கப்பட்டது. 32 மற்றும் 29 தளங்கள் கொண்ட அந்த இரண்டு கட்டிடங்களும் வெறும் 9 விநாடிகளில் தகர்க்கப்பட்டது.

நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற பெயரில் 29 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரட்டை கோபுரங்கள் போல் காட்சியளிக்கும். 100 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கட்டிடம், குதுப்மினாரைவிட உயரமானது.

இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானதால், இந்த கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த நொய்டா இரட்டை கோபுரத்தை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நீர்வீழ்ச்சி போல் வழிந்த புகை: இதற்கான பணி எடிஃபிஸ் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 3,700 கிலோ வெடிபொருட்களை கட்டிடத்தின் தூண்களில் நிரப்பும் பணிகள் முடிவடைந்து விட்டன. இன்று இந்த கட்டிடம் ‘வாட்டர் ஃபால் இம்ப்ளோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தகர்க்கப்பட்டது.

வெடிபொருட்கள் வெடித்ததும், அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, நீழ்வீழ்ச்சி கீழே விழுவதுபோல், சில நிமிடங்களில் இந்த இரட்டை கோபுரம் சரிந்து தரைமட்டமானது.

SCROLL FOR NEXT