அரசு இல்லங்களை காலி செய்யும் படி முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கெடு வியாழக்கிழமை முடிந்தது. எனினும் முன்னாள் அமைச்சர்கள் 55 பேரில் பெரும்பான்மையானோர் கெடுவுக்குள் காலி செய்யவில்லை.
இவர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
புதிய அமைச்சர்களில் 9 பேர் எம்.பி.க்கள் என்ற தகுதியில் தமக்கு கிடைத்துள்ள பங்களாக்களிலேயே தங்க முடிவு செய்துள்ளனர். மற்ற 29 பேருக்கு அவர்களது அந்தஸ்துக்கு உகந்த வகையில் புதிய பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, நடுத்தர மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் புதிய பங்களா ஒதுக்கீடு பெற்றவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் உடனடியாக அந்த பங்களாக்களுக்கு குடியேறும் நிலை இல்லை. இன்னும் அவற்றில் முன்னாள் அமைச்சர்களே தங்கி இருக்கின்றனர்.
அரசு இல்லங்களை வியாழக்கிழமைக்குள் காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு இணங்கி முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட சிலர்தான் வெளியேறி உள்ளனர் என நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
சிலர் காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளனர், சிலர் காலி செய்ய முன்வந்துள்ளனர் என நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். ஓரளவுக்குத்தான் நீட்டிப்பு தரமுடி யும். 2 அல்லது 3 மாத காலத்துக்கு நீட்டிப்பு தர சட்டம் அனுமதிக்க வில்லை என்றார் நாயுடு.
நகர்ப்புற மேம்பாட்டு அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் அரசு சொத்துகள் இயக்குநரகம் கெடுவுக்குள் வீடுகளை காலி செய்யாதவர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் தற்போதைய முகவரிகளிலேயே தொடர்ந்து வசிப்பார்கள்