இந்தியா

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த காஷ்மீர் டிஎஸ்பி பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் உச்ச நிலையில் இருந்தபோது, படை குவிப்பு தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தானுக்கு தெரிவித்த மாநில டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காஷ்மீரின் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் தன்வீர் அகமது பாகிஸ்தான் படைகளுக்கு உளவு தெரிவித்த தகவல் தெரியவந்ததை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில டிஜிபி கே.ராஜேந்திர குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து முழு தகவல்கள் வந்ததும், தன்வீரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், கவனக்குறைவால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதாகவும் டிஜிபி கே.ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தன்வீர் அகமது பணியில் இருந்தபோது, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் இருந்தவர், தன்னை ஒரு ராணுவ கமாண்டராக அறிமுகம் செய்து கொண்டு, போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் பள்ளத்தாக்கின் எந்தெந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த விவரங்களை வாட்ஸ் அப் மூலம் தன்வீர் அகமது அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பாதுகாப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் மாவட்ட எஸ்பியின் அனுமதி பெற்றதாகவும் தன்வீர் அகமது தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகம் இந்த தொலைபேசியை ஒட்டுக்கேட்டு உளவு தகவல்கள் பரிமாறிய விவரத்தை மாநில டிஜிபியிடம் தெரிவித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தன்வீர் அகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், அவர்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு பாதுகாப்பு முகமையின் பெயரை தெரிவித்து ரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சிப்பதாகவும் உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் உஷாரடைந்துள்ள சில போலீஸ் உயரதிகாரிகள் அவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு உரிய பதில் தர மறுத்துவிடுகின்றனர்.

SCROLL FOR NEXT