இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்), பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபின் பதான்கோட், காஷ்மீரில் உரி ராணுவ தளங் களில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது, கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை இந்திய ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், துல்லிய தாக்கு தலில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம்தான் அதிகமாக பாதிக் கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த வர்கள், ரேடியோவில் பேசிய உரையாடல்களை உளவுத் துறையினர் இடைமறித்துக் கேட்டுள்ளனர். அப்போதுதான், துல்லிய தாக்குதலில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள் பலியானதாகவும், அதிகபட்ச பாதிப்பு அந்த இயக்கத்துக்குதான் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த உரையாடல் ஆதாரம் ராணுவத்திடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து கேல், துத்னியால் உட்பட பல இடங்களில் இந்திய ராணுவத்தின் 5 குழுவினர் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது துத்னியால் பகுதியில் (வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு எதிர் புறத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ளது.) அமைக் கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலில்தான் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பதான்கோட், உரி ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் நினைத் துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தும் என்றும் தீவிர வாதிகள் சற்றும் எதிர்பார்க்க வில்லை. அதனால், அவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.