இந்தியா

பொது சிவில் சட்டம் என்பது சமத்துவம் அல்ல: பிருந்தா காரத்

விகாஸ் பதக்

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறையை எதிர்க்கும் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், பாலின நீதி மீதான பாஜக-வின் நேர்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

பாலின நீதி என்பதை பாஜக உண்மையான உணர்வுடன் பேசுகிறதா என்பது ஐயத்திற்கிடமானதே என்று கூறிய பிருந்தா காரத், இந்து சட்டத்தில் சீர்த்திருத்தம் கொண்டு வருவதை பாஜக தனது அரசியல் ஆளுமையாகக் கருதும் ஸ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர் கடுமையாக எதிர்த்திருப்பதால் இந்த விவகாரத்தில் பாஜக-வின் உண்மைத்தன்மை மீது ஐயம் எழுவதாக பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பேட்டி அளித்த பிருந்தா காரத், “முஸ்லிம் பெண்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதனை ஆதரிப்பதில் எந்த வித கேள்வியும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளிலேயே இந்த தலாக் முறை இல்லை. மேலும் இந்நாடுகள் இது மதநம்பிக்கையின்பாற்பட்டதல்ல, ஆண் ஆதிக்கம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன.

பாலின நீதி குறித்து பாஜக-வின் சில பிரசங்கங்களையும், கருத்துகளையும் கண்டு ஆச்சரியமடைந்தேன். ஸ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர்தான் பாஜக-வின் அரசியல் ஆதர்சம். இவர் இந்து சட்ட சீர்த்திருத்தங்களை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பியவர். இவர்கள் (பாஜக) எப்போதாவது அத்தகைய சிந்தனைகளை எதிர்த்திருக்கின்றனரா?

இன்னும் கூட இந்து பெண்களுக்கு நடக்கும் கொடுமை தீர்ந்தபாடில்லை. இந்து வம்சாவழி சட்டம், அதன் 2005-ம் ஆண்டு திருத்தங்களுக்குப் பிறகும் கூடபெண்கள் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை, சொத்தில் உரிமை கிடையாது. இதனை ஏன் அவர்கள் பேசுவதில்லை. தனிச்சட்டங்களை சீர்த்திருத்துவதில் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றையே செய்து வந்துள்ளனர்.

எனவே பொதுசிவில் சட்டம் என்றால் அது உடனே சமத்துவம் ஆகி விடாது. எது பொதுவாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் போதே பொதுமை என்பது சமத்துவம், சம உரிமை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட ஒன்றாகிறது. சமத்துவமே நோக்கமும் இலக்குமென்றால் அனைத்து தனிச்சட்டங்களையும் திருத்த வேண்டும்” என்றார் பிருந்தா காரத்.

SCROLL FOR NEXT