இந்தியா

தங்கள் மீது கல்வீசித் தாக்கினாலும் சேவையையே கடமையாகக் கொண்டது இந்திய ராணுவம்: பிரதமர் மோடி பாராட்டு

ஐஏஎன்எஸ்

சேவையையே முதற்கண் கடமையாகக் கொண்டது இந்திய ராணுவம் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

போபாலில் இந்திய ராணுவ வீரர்களுக்கான நினைவிட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது:

ராணுவ வீரரின் முதல் தோற்றம் சீருடை, ஆயுதங்கள், ஆகியவையாக இருக்கும், ஆனால் ராணுவத்தினருக்கு இன்னொரு ‘மனித முகமும்’ இருக்கிறது.

2013-ம் ஆண்டு உத்தராகண்ட் வெள்ளமாகட்டும், 2014 காஷ்மீர் வெள்ளமாகட்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதில் நம் ராணுவத்தின் பங்கு பெருமைக்குரியது.

காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோரை மீட்டு மனிதார்த்த உதவிகளை வழங்கியுள்ளனர், அதாவது இதே மக்கள்தான் தங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துபவர்கள் என்ற எதிர்மறைச் சிந்தனையல்லாது உதவிபுரிய சேவையாற்றுபவர்கள் நம் ராணுவத்தினர்.

சில வேளைகளில் இந்த கல்வீச்சுத் தாக்குதல் உயிரைக்கூட பறிக்கலாம். ஆனால் யார் இதைச் செய்தார்கள் தங்களுக்கு கடந்தகாலத்தில் இவர்கள் செய்தது என்ன என்பது போன்றவற்றைப் பற்றி கவலைப்படாதவர்கள் நம் ராணுவத்தினர். சக நாட்டு மக்களை காப்பாற்றுவதையே கடமையாகக் கொண்டவர்கள்.

உலக அளவில் ஒப்பிடும் போது இந்திய ராணுவம் வலுவுடையதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதநேயம், கட்டுக்கோப்பு, நடத்தை, ஒழுக்கம், குடிமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றில் இந்திய ராணுவம் முதன்மையானது.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

SCROLL FOR NEXT