இந்தியா

சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி விவாதிப்பது ராணுவத்தை அவமானப்படுத்துவதாகும்: அமைச்சர் வெங்கய்ய நாயுடு காட்டம்

பிடிஐ

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் உண்மையிலேயே தாக்குதல் நடத்தியதா? அப்படி என்றால் ஆதாரம் எங்கே என்று காங்கிரஸ் உட்பட சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, டெல்லியில் நேற்று கூறியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாம் கள் மீது மிகத் துணிச்சலாக நமது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதில் சந்தேகங்கள் எழுப்புவது ராணுவத்தை நாம் அவமானப்படுத்துவது போலா கும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி ஆதாரம் கேட்பதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய தேவை யில்லை. நல்லவேளை இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தனது தவறை உணர்ந்து, ராணுவத் தாக்குதலை விமர்சிப்பதில் இருந்து ஒதுங்கி கொண்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கூட இந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொண்டுள்ளது.

எந்த நாட்டுடனும் போர்புரிய இந்தியா விரும்பவில்லை. எனினும் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது தகுந்த பதிலடி கொடுப்போம். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். ‘‘நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டு விளையாடுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கு தல் நடக்கவில்லை. அது பொய்’’ என்று குற்றம் சாட்டினார். இவரது கருத்தை காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறும் போது, ‘‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆதாரம் அளிப்பதும் அளிக்காமல் இருப்பதும் மத்திய அரசின் உரிமை’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT