இந்தியா

பண்டிகை நாட்களில் காற்று மாசுபாடு கண்காணிப்பு: பட்டாசு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டெல்லி அரசு முடிவு

செய்திப்பிரிவு

வரவிருக்கும் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன் னிட்டு டெல்லியில் காற்று மாசு பாட்டை கண்காணிக்க கேஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங் களில் காற்று மாசுபாடு அளவை உலக சுகாதார மையம் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய அளவில் முதலிடத்தில் ம.பி.யின் குவாலியரும், இரண்டாம் இடத்தில் உ.பி.யின் அலகாபாத் நகரமும், மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரும் உள்ளன. தலைநகர் டெல்லி நான்காவது இடத்தில் உள்ளது.

இதையடுத்து டெல்லியில் காற்றின் தூய்மை குறித்து ஆராய மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டார். இதில் தேசிய சுற்றுப்புற காற்று தரக்குறியீட்டின் படி டெல்லியில் கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை காற்றில் மாசுத்துகள்கள் 2.5 முதல் 10 புள்ளிகள் வரை இருப்பது தெரியவந்தது. இதில் குறிப்பாக டெல்லியின் ஆர்.கே.புரம், ஆனந்த் விஹார், மந்திர் மார்க், புதுடெல்லி ஆகிய பகுதிகளில் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் துகள்கள் காற்றில் பரவியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மாசுபாட்டுக்கு வட இந்தியாவில் தசரா கொண்டாட் டங்கள் தொடங்கியதே காரணம் எனக் கருதப்படுகிறது. தசராவை தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை யும் வரவிருப்பதால் டெல்லியில் காற்று மாசுபாட்டை துல்லியமாகக் கணக்கிட டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் முக்கிய இடங்களில் மாநில மாசுக் கட்டுப்பாட்டு குழு சார்பில் மாசுத்துகள் கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இத்துடன் பட்டாசு கொளுத்து வதால் ஏற்படும் நச்சுப் புகை மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் டெல்லி அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “காற்று மாசுபாட்டின் அளவு தீபாவளி பண்டிகையின்போது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப் பட்டு விற்பனை செய்யப்படும் சீனப் பட்டாசுகள் அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. எனவே பட்டாசு கொளுத்துவதற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தவும் டெல்லியில் சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

டெல்லியில் பரவியுள்ள 2.5 புள்ளிகள் அளவிலான மாசுத் துகள்களால், மக்களுக்கு அதிக கேடுகள் ஏற்படும் என அஞ்சப் படுகிறது. கண்ணுக்குத் தெரியாத இத்துகள்கள் நம் நாசி வழியாக தொண்டைக்குள் புகுந்து தங்கி விடும் தன்மை கொண்டவை. காற்றில் பரவியுள்ள மாசுத் துகள் களால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் பேர் உயிரிழப்ப தாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT