இந்தியா

வட இந்தியாவில் ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி: சில சுவையான தகவல்கள்

ஆர்.ஷபிமுன்னா

வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தொடர்ந்து ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது. இதில் இன்றைய தினம் (ஞாயிறு) முக்கிய திருநாள் ஆகும்.

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருநாள் மட்டும் அன்றி வட இந்திய மாநிலங்களில் ’தீபாவளி பருவம்’ எனும் பெயரில் ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 28-ல் துவங்கி வரும் செவ்வாய்கிழமை நவம்பர் 1 ஆம் தேதி வரை ஆகும்.

’தந்தேரஸ்’ என அழைக்கப்படும் முதல் நாள் வீட்டிற்கு உலோகங்கள் வாங்கும் நாளாகக் கருதப்படுகிறது. இதில், பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி தங்க நகை முதல் வெள்ளி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் வரை வாங்குகிறார்கள். இதை மாலை வீட்டில் வைத்து லஷ்மியின் பெயரில் பூஜை செய்து மகிழ்கிறார்கள். மறுநாள் கொண்டாட்டம் ’சோட்டி தீபாவளி’(சின்ன தீபாவளி) எனப்படுகிறது. இந்த நாளில், செல்வம் தரும் கடவுளாக இந்துக்கள் கருதும் லஷ்மி மாலையில் தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக லஷ்மியை வரவேற்க அவர்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்திருப்பார்கள். அதே தினத்தில் தம் வீட்டில் உள்ள துர்தேவதைகளும் வெளியேறும் என்பதும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகும்.

மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தீபாவளி ஆகும். ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி பருவத்தின் முக்கியத் திருநாளாகும். இதில், புத்தாடை உடுத்தி தம் வீட்டிற்கு வந்து விட்டதாகக் கருதும் லஷ்மிக்கு மாலையில் பூஜை செய்வார்கள். பட்டாசுகளையும் வெடிப்பார்கள். பிறகு தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள். நான்காவது தினமான நாளை திங்கள் கிழமை ‘கோவர்தன் பூஜை’ நாளாகும். இதில், அனைவரும் பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து மகிழ்வார்கள். இத்துடன் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளும் தம் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பூஜை போட்டு புதுக்கணக்கு துவங்குவார்கள். இந்த நாளை உபி மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களில் ராமர் பெயரில் கொண்டாடுவதும் வழக்கம். ராவணனிடம் போரிட்டு வென்ற ராமர் அயோத்திக்கு திரும்பி முடிசூட்டிய நாளாகவும் இது கருதப்படுகிறது. இதற்காக, அவர்கள் ராமருக்கும் பூஜை செய்து வணங்குகிறார்கள்.

கடைசியாக ஐந்தாவது நாள் ‘பைய்யா தோஜ்’ என்பது ஆகும். இதில், பெண்கள் தம் சகோதரர்களை தேடிச் செல்வார்கள். மணமான பெண்களாக இருப்பினும் தங்கள் குடும்பப் பொறுப்பை தம் கணவன்மார்களிடம் விட்டு, விட்டு கவலைப்படாமல் கிளம்பி விடுவார்கள். இந்த நாளில் சாலைகளில் ஓடும் வாகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். இடம் கிடைக்காத போது பேருந்துகளின் மேற்புறங்களிலும் பெண்கள் அமர்ந்து செல்லத் தயங்குவதில்லை. இதற்காக, வட மாநிலங்களின் பெரும்பாலான அரசுகள் மூன்று நாட்கள் வரை அரசு விடுமுறையாக விடுவது உண்டு

SCROLL FOR NEXT