குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இனி பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில், திருத்தம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப வன்முறைச் சட்டம் 2005-ன் கீழ், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்தால், அவர்களுக்கு துன்பம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டத்தின் கீழ் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007-ம் ஆண்டு புகார் அளித்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து மும்பை உயர் நீதி மன்றத்துக்கு வந்தபோது, இச்சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் மைனர் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி, மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 2(க்யூ)-ன்படி, ‘அடல்ட் மேல் பர்சன்’ அதாவது, 18 வயதைக் கடந்த ஆண் மீது புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் மீதும் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர், சிறுமியர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று வாதிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆண், பெண் மற்றும் சிறுவர், பெரியவர் என்ற சிறு வேறுபாடுகள் இந்தச் சட்டத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. எனவே, இதன் பிரிவு 2(க்யூ)-வில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அடல்ட் மேல்’ என்ற இரண்டு வார்த்தைகளை நீக்க உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்மூலம், இனி பெண்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமியர் மீதும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.