இந்தியா

அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை

பிடிஐ

'அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது' என, இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.

2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய குடிமையியல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த பிறகு, வழக்கம் போல அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலப் பணிகளுக்கு செல்லாமல், மத்திய அரசின் முக்கிய துறைகளில் உதவி செயலாளர்களாக குறுகிய கால பணியில் அமர்த்தப்பட்டனர்.

நிர்வாகத்தில் அனுபவ முதிர்ச்சியையும், இளம் தலைமுறையின் புதுமை எண்ணங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, ஒட்டுமொத்த நிர்வாகத்தின் செயல்பாட்டு முறையை இளம் அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன்படி, மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தொடர்புடைய 58 அமைச்சகங்களில் இந்த இளம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இத்துறைகளின் தினசரி அலுவல் நடைமுறைகள் உள்ளிட்டவற்றை இளம் அதிகாரிகள் நேரில் கண்டு அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 3 மாதங்கள் இப்பிரத்தியேக பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இன்றுடன் பயிற்சிக் காலம் முடிவடைந்தது. பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, தூய்மை இந்தியா, மின்னணு நீதிமன்றம், சுற்றுலா, ஆட்சி நிர்வாகத்தில் செயற்கைகோள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புதிய வரைவு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு காட்சியமைப்புடன் விளக்கிக்காட்டினர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, 'அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது. இதுவே நான் உங்களுக்கு கூற விரும்பும் தகவல். நீங்கள் எந்த தளத்தில் இயங்கினாலும், குழுவாக சேர்ந்து பணியாற்றுங்கள். கூட்டு முயற்சிக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

முடிவெடுக்கும் போது, 2 விஷயங்களை மனதில் கொண்டாக வேண்டும். ஒன்று, நீங்கள் மேற்கொள்ளும் முடிவு தேச நலனுக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது. இரண்டாவது, உங்கள் முடிவு நாட்டில் ஏழைகளுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது' என்றார்.

SCROLL FOR NEXT