இந்தியா

“850... இந்தியாவுக்கு ஆபத்தான எண் இது” - தொகுதி மறுவரையறைக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: “மக்களவைத் தொகுதிகளை 543-ல் இருந்து 850-ஆக உயர்த்தும் திட்டம், வாக்குப்பதிவுக்கு முன்பாகவே பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். இது தங்களுக்குச் சாதகமான தொகுதி மறுவரையறையைச் செய்ய பாஜகவுக்கு வழிவகுக்கும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான வாக்குகளைச் சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் குவியச் செய்து, மற்ற வாக்குகளைப் பல தொகுதிகளுக்குப் பிரித்துச் சிதறடிப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளின் தேர்தல் செல்வாக்கை பாஜக குறைக்கக்கூடும்.

தொகுதி மறுவரையறைக்கு முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும். இதன்மூலம் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி பாஜக தள்ளுகிறது.

மக்களவையில் 543 இடங்களையே தக்கவைத்துக் கொள்ள வேண்டும். தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மக்களவை இடங்களை அதிகரிக்க காத்திருக்காமலேயே, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும்.

மேலும், இதன்மூலம் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளை பாஜக பலவீனப்படுத்துகிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உண்மையிலேயே விரும்புகிறார்களா என்று கேள்வி எழுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தில், பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் இடம்பெறுவார். மேலும், ஆணையத்தின் இரண்டாவது உறுப்பினரான ஞானேஷ் குமார், மூன்றாவது உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பார்.

மக்களவையின் தொகுதிகளை 850 ஆக அதிகரிப்பது, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாகவே பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் தேர்தல் சாதகத்தை ஏற்படுத்தித் தரும்.

இந்த முன்மொழிவின் மூலம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்குத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்கான பரந்த அதிகாரம் கிடைக்கும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடிக்குச் சாதகமான முறையில் தொகுதி எல்லைகளை வரையறுப்பார். எனவே, தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயக படுகொலை ஆகும்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT