ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர், மணலையும் ஒரு சிறிய குச்சியையும் மட்டுமே பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கிறார்.
‘ஆஷாட்டி அம்மும்மா'அல்லது ‘இந்திரா அம்மா' என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், சுமார் 10 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எழுத்துகள், எண்கள், கணிதம் ஆகியவற்றைச் சொல்லித் தருகிறார். மாநிலத்தின் பாரம்பரிய ‘ஆசான் களரி’ முறையுடன் தொடர்புடைய கற்பித்தல் பாணியை அவர் பின்பற்றுகிறார்.
ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் பலகைகள் நிறைந்த இந்தக் காலத்தில், அவரது எளிய அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீட்டின் திண்ணையில் பாயில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் முன்னால் ஒரு வாளி மணலைப் பரப்பி, சிறிய மரக்குச்சியால் அதைச் சமப்படுத்துகிறார் அம்மும்மா.
பின்னர் ஆங்கிலம், மலையாள எழுத்துகளை, சாய்வு வடிவங்கள் உட்பட, மணலில் எழுதிக் காட்டுகிறார். குழந்தைகள் உன்னிப்பாகக் கவனித்து, அதே எழுத்துகளை விரல்களால் வரைகின்றனர். அங்கு நோட்டுப் புத்தகங்களோ, பேனாக்களோ, கரும்பலகையோ இல்லை.
தவறுகளை அழித்துவிட்டு மீண்டும் எழுதலாம் என்பதால், புதிய காகிதம் தேவையின்றித் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்ய முடிகிறது. இந்தக் காணொளி @mom_of_safaachiiii என்ற இன்ஸ்டா கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது வைரலாகி பலரின் மனதைக் கவர்ந்துள்ளது. ஒரு நெட்டிசன் இந்த இடத்தை “உலகின் மிக அழகான வகுப்பறை” என்று வர்ணித்துள்ளார்.