இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு கட்டிடத்தில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

56 மணி நேரம் நடைபெற்ற சண்டை முடிவுக்கு வந்தது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு கட்டிடத்தில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து 56 மணி நேரம் நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ் சாலையில் பாம்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் (ஈடிஐ) அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடத்துக்குள் 2 அல்லது 3 தீவிரவாதிகள் திங்கள்கிழமை புகுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் அந்த வளாகத்தை சுற்றி வளைத்து, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். முதல் நாளில் இருதரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். 2-வது நாளில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றோம்.

இதையடுத்து, 3-வது நாளாக நேற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த மற்றொரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். எனினும், வேறு யாரேனும் இருக்கிறார்களா என அங்குள்ள 50 அறைகளிலும் சோதனை நடத்தினர். ஆனால் யாரும் இல்லை என்பதால் சுமார் 56 மணி நேரம் நடந்த சண்டை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இருவரது சடலங்களையும் கைப்பற்றி அவர்களைப் பற்றிய விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்தத் தாக்குதலால் ஈடிஐ கட்டிடத்தின் பெரும்பகுதி சேதம் அடைந்துள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊடுருவல் முறியடிப்பு

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் தங்தார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக, ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சிலர் நேற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை அறிந்த இந்திய பாதுகாப்புப் படையினர் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா தெரிவித்தார்.

96-வது நாள்

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப் பட்டதையடுத்து, வன்முறை வெடித் தது. இதனால் நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 96-வது நாளை எட்டியது. இது தொடர்பான வன் முறைக்கு இதுவரை 84 பேர் பலி யாகி உள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதனிடையே, மொகரம் நிகழ்ச்சி என்பதால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக ஸ்ரீநகரின் சில பகுதி களில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT