துல்லியத் தாக்குதல் எனும் அறுவை சிகிச்சைக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்திலிருந்து இன்னமும் பாகிஸ்தான் எழுந்திருக்கவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் ‘அனஸ்தீஷியா’வில் உள்ள பாகிஸ்தானுக்கு தனக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூட தெரியாது ஏனெனில் இன்னமும் மயக்கம் தெளியவில்லை என்று மனோகர் பரிக்கர் சற்றே கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.
வியாழனன்று கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வியூகத் துல்லியத் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் பலியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உத்தராகண்ட்டில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் நேற்று கூறும்போது, “இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் என்றால் எதிர்காலத்திலும் இது போன்ற தாக்குதல்களை நடத்த இந்தியா தயங்காது.
துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு மயக்க மருந்திலிருந்து மீளாத நோயாளி போல் உள்ளது பாகிஸ்தான், இன்னமும் தனக்கு என்னமாதிரியான அறுவை சிகிச்சை நடந்தது என்பது கூற தெரியாத நோயாளிதான் பாகிஸ்தான். துல்லியத் தாக்குதலுக்கு 2 நாட்கள் கழிந்த பிறகும் கூட என்ன நடந்தது என்பது பாகிஸ்தானுக்கு தெரியவில்லை.. புரியவில்லை.
இனிமேலும் இத்தகைய சதிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால், தகுந்த பதிலடி கொடுப்போம்.
ராணுவம் தங்களது ஆற்றல்களை உணரச் செய்தேன். மோடியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க ராணுவம் திறமையாகச் செயல்பட்டது. நாட்டின் சார்பாக ராணுவத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் எந்த நாட்டையும் பிடிக்க விரும்பவில்லை. ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வென்று வீபிஷணனிடம் கொடுத்தார், அதாவது நாம் வங்கதேசப்போரின் போது நாம் செய்ததைப் போல” என்றார் மனோகர் பரிக்கர்.