உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற முக்கியக் கூட்டத்தை முதல்வர் அகிலேஷ் யாதவ் தவிர்த்ததன் மூலம் கட்சியில் விரிசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும் இக்கூட்டத்தில் அவரை முதல்வர் வேட்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் சிவபால் யாதவ் அறிவித்தார்.
உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக சமாஜ்வாதி கட்சியின் மாவட்ட மற்றும் நகரத் தலைவர்கள் கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அகிலேஷை அவரது சித்தப்பாவும் கட்சியின் மாநிலத் தலைவருமான சிவபால் யாதவ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். எனினும் அகிலேஷ் பங்கேற்கவில்லை.
என்றாலும் இக்கூட்டத்தில் சிவபால் சிங் பகைமையை கைவிட்டு அகிலேஷை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நவம்பர் 5-ம் தேதி சமாஜ் வாதி கட்சியின் வெள்ளி விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கட்சியினரை சிவபால் கேட்டுக்கொண்டதாக கூறப்படு கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து அகிலேஷின் தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் கூறும் போது, “தேர்தலுக்குப் பிறகு கட்சி எம்எல்ஏக்கள் அதை முடிவு செய் வார்கள்” என்றார். இந்நிலையில் அகிலேஷை முதல்வர் வேட்பாள ராக சிவபால் அறிவித்துள்ளார்.
அகிலேஷ் தனது அரசின் வளர்ச்சிப் பணிகளை மக்களிடம் விளக்குவதற்காக நவம்பர் 3-ம் தேதி ரத யாத்திரை தொடங்கப் போவதாக தனது தந்தை முலாய முக்கு கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் கட்சியின் வெள்ளி விழாவிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்பதையே இது உணர்த்துகிறது.
அகிலேஷ் சிவபால் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தொடர்வதால், தேர்தலுக்கு முன் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற் படலாம் என அரசியல் வட்டாரத் தில் பேசப்படுகிறது.
தேசிய சமாஜ்வாதி கட்சி அல்லது பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி என்ற பெயரில் அகிலேஷ் புதிய கட்சியை அறிவிக்கலாம் எனவும் இக்கட்சிக்கு மோட்டார் சைக்கிள் தேர்தல் சின்னமாக இருக்கலாம் என்றும் கூறப்படு கிறது.