இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கு: துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திப்பிரிவு

ஷீனா போரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜிக்கு எதிராக சிபிஐ புதிதாக 2-வது துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே ராய்கட் வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் புதைக் கப்பட்டிருந்த இளம் பெண் ஷீனா போரா சடலம் கண்டெடுக்கப் பட்டது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஷீனாவின் தாய் இந்திராணி முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் இணைந்து ஷீனாவை படுகொலை செய்தது தெரியவந்தது. ஏப்ரல் 2012-ல் நடந்த இந்த கொலை தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிபிஐ நடத்திய தொடர் விசாரணையில் இந்திராணி முகர்ஜி யின் தற்போதைய கணவரும், முன்னாள் ஸ்டார் இந்தியா டிவியின் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜிக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டு கடந்த பிப்ர வரியில் அவரது பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 2-வது துணை குற்றப்பத்திரிகை சிபிஐ தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஷீனா போராவை கொல்வதற்காக தீட்டிய சதித் திட்டம், அவரது சடலத்தை காரில் எடுத்துச் சென்று ராய்கட் வனப்பகுதியில் புதைத்தது உட்பட அனைத்து விவரங்களையும் இந்திராணி பீட்டர் முகர்ஜியிடம் தெரிவித்து இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணையில் இதற்கு முரணான தகவலை பீட்டர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான வாதங்கள் இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT