புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு முறைப்படி நேற்று ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பான ஆவணங்களை இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் சையது அக்பருதீன், நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபையின் தலைமையகத்தில் நேற்று ஒப்படைத்தார். இதன்மூலம் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்த நாடுகள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்தது. அதில், பசுமை குடில் வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்துவது தொடர்பான பருவநிலை மாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதற்கு இதுவரை 61 நாடுகள் ஒப்புதல் வழங்கி இருந்தன. பிரதமர் மோடி அறிவித்தப்படி, காந்தி பிறந்த தினமான நேற்று பாரிஸ் ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு முறைப்படி ஒப்புதல் அளித்தது.