இந்தியா

மாணவர் மாயம்: துணை வேந்தரை சிறைபிடித்து ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம்

ஜெய்தீப் தியோ பஞ்ச்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன மாணவர் ஒருவரைக் கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த சகமாணவர்கள் புதன்கிழமை விடிய விடிய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜகதீஷ் குமார் உட்பட உயரதிகாரிகள் சிலரை வளாகத்தினுள் சிறைபிடித்து வைத்தனர்.

ஜே.என்.யு. மாணவர் நஜீப். இவரைக் கடந்த அக்டோபர் 15-ம் தேதி காலை 11 மணி முதல் காணவில்லை. இவர் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி - மாந்தவி விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கும் ஏபிவிபி மாணவ அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நஜீப் மாயமானார் என்பதே சக மாணவர்களை முன்வைக்கும் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்லாமல் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜே.என்.யு. மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2.30 மணி முதல் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நுழைவு வாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் அடுத்தடுத்து பதிவு செய்த ட்வீட்களில், "பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கப் பிரதிநிதிகளிடம் நாங்கள் பேசியிருக்கிறோம். காணாமல் போன மாணவர் நஜீபை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் எந்த சுணக்கமும் இல்லை என பலமுறை எடுத்துரைத்துவிட்டோம். ஆனாலும், நாங்கள் இன்னமும் அடைபட்டிருக்கிறோம். மணி அதிகாலை 2 மணியாகிவிட்டது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாணவர்களின் புதிய கோரிக்கை:

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கும் புதிய கோரிக்கை என்னவென்றால், மாணவர் நஜீப் மாயமானது தொடர்பாக புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்பதே.

இது தொடர்பாக ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் மோஹித் பாண்டே கூறும்போது, "நிர்வாகத்துடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துவிட்டன. 6 நாட்களாக பொறுப்பான எந்த பதிலையும் துணை வேந்தர் தரவில்லை. நாங்கள் கோருவதெல்லாம், நஜீப் மாயமானது தொடர்பாக நிர்வாகத் தரப்பில் எழுத்துபூர்வமான புகாரை போலீஸில் கொடுக்க வேண்டும். விடுதிகளில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே.

அவர் மேலும் கூறும்போது, நஜீப் காணாமல் போன நாள் முதல் அவரது தாயார் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துக்கு முன் உதவி கோரி காத்துக் கிடக்கிறார். ஆனால், இதுவரை அவரை ஒருமுறை மட்டுமே பல்கலைக்கழக் நிர்வாகம் சந்தித்துள்ளது என்றார்.

ஜே.என்.யு. பல்கலைக்கழக வளாகம் மீண்டும் ஒரு முறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

SCROLL FOR NEXT