ஆம் ஆத்மி தலைவர்கள் மீது இளம்பெண் ஒருவர் டெல்லியில் நேற்று காலணியை வீசினார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வரிச் சலுகை வழங்கியதாக டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வருமான வரித் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவர் டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அவருடன் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், ஆசுதோஷ் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
விசாரணை முடிந்த பிறகு சத்யேந்தர் ஜெயினும் இதர தலைவர்களும் காரில் புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த பாவனா அரோரா என்பவர் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது காலணியை வீசினார். அந்த காலணி கார் மீது விழுந்தது.
இதுகுறித்து பாவனா நிருபர் களிடம் கூறியபோது, “இந்திய ராணுவ தாக்குதல் வீடியோவை வெளியிடுமாறு கேஜ்ரிவால் கோரியுள்ளார். அவரும் அவரது கட்சியினரும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள். இதைக் கண்டித்து காலணி வீசினேன்” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இதே பாவனா கடந்த ஜனவரியில் முதல்வர் கேஜ்ரிவால் மீது மை வீசியவர் என்பது நினைவுகூரத்தக்கது.