உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அஜீத்சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளத்தை(ஆர்எல்டி) தன்பக்கம் இழுக்க முலாயம் சிங் யாதவ் விரும்புகிறார். இவரது சகோதரரான ஷிவ்பால் சிங் யாதவ் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமாஜ்வாதி கட்சி துவங்கி 25 ஆண்டுகள் முடிவதை ஒட்டி வரும் நவம்பர் 5 ஆம் தேதி லக்னோவில் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள வேண்டி ஜனதா கட்சியில் இருந்து பிரிந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அழைப்பை சிவ்பால் யாதவ் அனைவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இந்தவகையில், நேற்று முன் தினம் அஜீத்சிங்கையும் ஷிவ்பால் சந்தித்தார். அப்போது அவரிடம் உ.பி சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்கும்படி கோரியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அஜீத்சிங்கும் ஆர்வம் காட்டியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
உ.பி.யின் மேற்கு பகுதியில் அதிகம் வசிக்கும் ஜாட் சமூகத்தினர் ஆதரவு பெற்ற கட்சியாக ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளது. இந்த பகுதியின் சட்டப்பேரவை தொகுதியில் அஜீத்சிங் கட்சிக்கு தற்போது 9 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க உபி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் விரும்புகின்றனர். அடுத்த வருடம் வரவிருக்கும் உபி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தன் கட்சியை பிஹாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்க விரும்பினார் அஜீத்சிங்.
இதற்காக அக்கட்சியின் தலைவரும் பிஹார் மாநில முதல் அமைச்சருமான நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். பிறகு இந்த முடிவை திடீர் என ரத்து செய்தவர், பாஜக தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை துவக்கினார். இதில் குறிப்பிட்ட முன்னேற்றம் கிடைக்காதமையால் மீண்டும் நிதிஷுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தார். இதில் இறுதி முடிவு ஏற்பட்டு தொகுதிகள் அறிவிக்கப்படும் நிலையில் தற்போது சமாஜ்வாதியுடன் பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளார் அஜீத்சிங்.
இதுபோல், ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிநிலையை எட்டிய பின் அதை ரத்து செய்து மற்றொரு கட்சியுடன் பேசுவது அஜீத்சிங்கின் வழக்கம். இதனால், கடந்த மக்களவை தேர்தலில் இவரது கட்சி தனித்து விடப்பட்டது. இதன் காரணமாக ஒரு தொகுதியிலும் ஆர்எல்டிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இது போலவே உபி சட்டப்பேரவை தேர்தலிலும் அஜீத்சிங்கின் செயல்பாடுகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜீத்சிங் தனது மகன் ஜெயந்த் சவுத்ரியை உ.பி.யின் முதல் அமைசர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்புகிறார்.