கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மஸ்தான் கோயிலில் கிருஷ்ணருக்கு நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைக் காண திரளான பக்தர்கள் கூடி யிருந்தனர். படம்: பிடிஐ. 
இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நெரிசல் - உ.பி.யின் மதுரா கோயிலில் பக்தர்கள் 2 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் கடவுள் கிருஷ்ணர் பிறந்தார் என நம்பப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணர் கோயிலான பாங்கே பிஹாரி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.

நேற்று அதிகாலையில் மங்கள ஆரத்தி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜபல்பூரை சேர்ந்த 65 வயது பக்தர் ஒருவரும் நொய்டாவை சேர்ந்த 55 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவத்தை அரசு நிர்வாகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. சம்பவத்துக்கான காரணத்தை ஆராயவும் உள்ளூர் நிர்வாகத்துக்கு உரிய வழிகாட்டுதல் அளிக்கவும் ஆக்ரா ஆணையர் அமித் குப்தா மதுரா சென்றுள்ளார்” என்றார்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்காக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT