இந்தியா

நிர்வாகத்தின் அலட்சியத்தினால் டெல்லி மக்கள் நோய் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்: உச்ச நீதிமன்றம் சாடல்

பிடிஐ

தலைநகர் டெல்லியில் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அலட்சியப் போக்கினால் மக்கள் நோய் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக சாடியுள்ளது.

மேலும், டெல்லி துணை நிலை ஆளுநர் ஜங் மற்றும் டெல்லி அரசுக்குமிடையேயான சந்திப்பின் முடிவுகளும் கடும் ஏமாற்றமளிப்பதாக உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

“நேற்று நடந்த கூட்டத்தின் விவரங்களை அறிந்தோம், ஆனால் அதன் பலன்கள் கடும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இவர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. இதன் காரணமாக டெல்லி மக்கள் நோய் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்” என்று சாடியதோடு இன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் டெல்லி துணை நிலை ஆளுநரும் டெல்லி அரசும் சந்தித்து ஆக்கப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் நம்பிக்கை அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வேஸ் டெல்லி அரசு அதிகாரிகளுக்கும் ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் இடையே நடைபெறும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டு நோய் அச்சுறுத்தலை தீர்ப்பது எப்படி என்று அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

“கூட்டத்தில் பங்கேற்பவர்கள் டெல்லி மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கப்படும் நடவடிக்கை கூட்டுறவு முறையில் ஒருவருக்கொருவர் உதவி புரியும் விதமாக அமைய வேண்டும்” என்று கூறிய உச்ச நீதிமன்றம் விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அக்டோபர் 4-ம் தேதி, உச்ச நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் உடனடியாக ஆளுநர் ஜங்குடன் சந்திப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதை தாமாகவே கருத்தில் கொண்டு வழக்கு மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், சிறுவனுக்கு சிகிச்சை மறுத்த மேக்ஸ் மருத்துவமனை, மூல்சந்த் கைரத்திரம் மருத்துவமனை, ஆகாஷ் ஹாஸ்பிடல்ஸ், சாகெட் சிட்டி ஹாஸ்பிடல்ஸ் மற்றும் ஐரீன் ஹாஸ்பிடல் ஆகிய மருத்துவமனைகள் சிறுவனுக்கு சிகிச்சை மறுத்ததால் மருத்துவமனையை ஏன் மூடக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை மறுக்கப்பட்டதால் சிறுவன் இறக்க, இதன் காரணமாக பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பானது.

SCROLL FOR NEXT