இந்தியா

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாயமான மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

பிடிஐ

துப்பு கொடுத்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாயமான மாணவர் நஜீப் அகமதுவை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை டெல்லி போலீஸார் அமைத்துள்ளனர். காணாமல் போன மாணவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, ரூ.50 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை மாணவரான நஜீப் அகமது, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணவில்லை. முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு, பல்கலை விடுதியில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் அவர் மாயமானார்.

நஜீப் அகமதுவை கண்டுபிடிக்க பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அவரின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் உச்சக்கட்டமாக, பல்கலை துணைவேந்தர் ஜகதீஷ் குமார் மற்றும் 12 அலுவலர்களை மாணவர்கள் பல்கலை நிர்வாக கட்டிடத்துக்குள்ளேயே பூட்டிவைத்தனர். 20 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட துணைவேந்தர் மற்றும் அலுவலர்கள், மத்திய அரசின் தலையீட்டுக்குப் பின், மதியம் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, டெல்லி போலீஸ் கமிஷனரைத் தொடர்புகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாயமான மாணவர் நஜீப் அகமதுவை தேடிக் கண்டுபிடிக்க சிறப்பு போலீஸ் படை அமைக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்படி, டெல்லி தெற்கு கூடுதல் டிசிபி-2 தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தெற்கு டெல்லி கூடுதல் டிசிபி-1 நுபுர் பிரசாத் தெரிவித்தார்.

மாணவர் நஜீப் அகமது குறித்து துப்பு கொடுப்போருக்கு, ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பிரசித்தி பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கண்ணையாக் குமார் உள்ளிட்ட மாணவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து மாணவர்களின் இரு பிரிவினருக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரம், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், நஜீப் அகமது உள்ளிட்டோரை தாக்கியதாகவும், அதனைத்தொடர்ந்தே அவர் மாயமானதாகவும், இடதுசாரி தொடர்புடைய அகில இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT