உத்தரப் பிரதேச அமைச்சரவை யில் ஷிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று நீக்கினார். இதற்குப் பதிலடியாக அகிலேஷின் ஆதரவாளர் ராம் கோபால் யாதவ் எம்.பி. சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் அகிலேஷ் தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் லக்னோவில் நேற்று நடந்தது. இதில் ஷிவ்பாலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் ஷிவ்பால் யாதவ், அவரது ஆதரவாளர்கள் சதாப் பாத்திமா, நராத் ராய், ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.
சமாஜ்வாதியின் மூத்த தலைவரான அமர் சிங் கடந்த 2010-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்மையில் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். இதைத் தொடர்ந்து அமர் சிங்கின் ஆதரவாளரான நடிகை ஜெயபிரதாவுக்கு கடந்த ஆகஸ்டில் மாநிலத் திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது பதவியை முதல்வர் அகிலேஷ் நேற்று பறித்தார்.
ராம் கோபால் யாதவ் நீக்கம்
முலாயமின் மற்றொரு சகோதரர் ராம் கோபால் யாதவ் எம்.பி. அகிலேஷின் தீவிர ஆதரவாளர் ஆவார். அகிலேஷின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி யாக ராம் கோபால் யாதவ் நேற்று சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்டார்.
‘பாஜகவுடன் இணைந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடு பட்டதால் அவர் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்’ என்று மாநிலத் தலைவர் ஷிவ்பால் யாதவ் அறிவித்தார்.
வாரிசு அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் தேர்தலுக்கு முன்பாகவே சமாஜ் வாதி கட்சி உடையக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் முலாயம் சிங் தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள், மூத்தத் தலைவர்கள் பங்கேற்கும் உயர்நிலைக் கூட்டம் லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.