இந்தியா

தனது லாகூர் பயணத்திற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: அனுராக் காஷ்யப் வலியுறுத்தல்

பிடிஐ

இந்திய பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் நிலவுவதால் பாகிஸ்தான் கலைஞர்கள் நடித்த படங்களை வெளியிட தடை விதித்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்த அனுராக் காஷ்யப், பிரதமர் தனது லாகூர் பயணத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கரண் ஜோஹாரின் ‘ஏ தில் ஹைன் முஷ்கில்’ என்ற திரைப்படத்தை வெளியிட இந்திய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மிக நெருக்கமாக நடித்துள்ள விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் நடித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனுராக் காஷ்யப், “உலகம் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நம் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண திரைப்படங்கள் மீது பழி சுமத்தி தடை செய்து விடுகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பிரதமரைச் சந்தித்ததற்கு இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. அது டிசம்பர் 25ம் தேதி. அதேநேரத்தில்தான் கரண் ஜோஹார் இந்தப் படத்தை ஷூட் செய்து கொண்டிருந்தார்.

நீங்கள் மவுனம் சாதிக்கும் போது நாங்கள் மட்டும் அதன் விளைவை எதிர்கொள்ள வேண்டும்? நீங்கள் எங்கள் வரிப்பணத்தில் உங்கள் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றி அமைத்து பாகிஸ்தான் சென்றீர்கள். ஆனால் படம் எடுப்பவர்கள் வட்டி கொடுத்து கொண்டிருக்கின்றனர். நான் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஏனெனில் நான் வாயடைத்துப் போனேன். எனக்குப் புரியவில்லை. நீங்கள் புண்பட்டால் என்னை மன்னியுங்கள்.

நான் தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். நான் ஏன் புகார் கூறுகிறேன் என்றால் அரசு எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். நான் பிரதமரை கேள்வி கேட்கிறேன் என்றால் அதற்கான உரிமை எனக்குண்டு. நாங்கள் நீண்ட காலமாகவே தாக்கப்படத்தக்கவர்களாக இருந்து வருகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் நிலைப்பாடு எடுக்க நாங்கள் விலை கொடுத்து வருகிறோம். இருநாட்டு எல்லைகளைக் கடந்து நடைபெறும் உண்மையான வர்த்தகம் எதுவும் பாதிப்படைவதில்லை, ஆனால் நாங்கள் விலை கொடுக்க பணிக்கப் படுகிறோம்.

தாய்நாட்டின் மீதான எனது பற்றை சத்தமிட்டு கேள்வி கேட்பவர்கள், எல்லையில் நம் நாட்டை பிரதிநிதித்துவம் செய்யட்டும். தேசப்பற்றை மரியாதைக்குரிய விதத்தில் வெளிப்படுத்துங்கள். சப்தம் போடுவதால் பயனில்லை. ஆம், பிரதமரே எங்களுக்குப் பாதுகாப்பு தேவை. இதுதான் அதற்கு உரிய நேரம்.

பிரதமருடன் உரையாட முடியாது, அவரை கேள்வி கேட்க முடியாது, அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்று குருட்டு வெறியர்கள் உருவாக்கிய பயத்தில் வாழ நான் மறுக்கிறேன். “நம்மை எப்போதும் செய்தியின் வெளிச்சத்தில் செலுத்தும்” தடை என்ற போலி தேசியவாதத்தின் மூலம் நான் பிரதமரின் கவனத்தை ஈர்ப்பவனல்ல, மாறாக நான் நேரடியாக அவரிடமே எனது கேள்விகளைக் கேட்கிறேன்” என்று தொடர் ட்வீட்களில் கொட்டித் தீர்த்துள்ளார்.

SCROLL FOR NEXT