இந்தியா

வீட்டுப்பாடம் செய்யாததால் பேனாவில் கண்ணை குத்திய ஆசிரியர்: ஆந்திராவில் தலித் சிறுமி பார்வை இழக்கும் அபாயம்

எஸ்.முரளி

வீட்டுப்பாடம் செய்யாததால் பேனாவால் மாணவியின் கண்ணை ஆசிரியர் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது தலித் சிறுமி பார்வையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரகாசம் மாவட்டம் காங்கிரிக்கு அருகில் உள்ள பி.சி.பள்ளி என்னும் இடத்தில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்த சிறுமியின் தந்தை தேசரி மனோகர் மற்றும் தாய் தேசரி சுஜாதா கூறும்போது, ''செப்டம்பர் 14-ம் தேதி வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச ரெட்டி, எங்கள் மகள் தேசரி சனிகாவைத் திட்டியுள்ளார். அவரின் கேள்விகளுக்கு சனிகா சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி தன்னிலை இழந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பயமுறுத்தும் முயற்சியாக ஆசிரியர், பேனாவை சனிகாவின் கண்களுக்கு அருகே கொண்டு சென்றுள்ளார். இதனால் சனிகாவின் இடது கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்" என்று கூறினர். அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், உரிய இழப்பீடு வழங்கப்படுமென உறுதியளித்தார்.

''குண்டூர் மாவட்டத்திலுள்ள சங்கர நேத்ராலயா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற தேசரி குடும்பம், தற்போது சிறுமியின் கண்களும், எதிர்காலமும் இருண்டு விடுமோ என்ற அச்சத்துடன் இருக்கிறது'' என்கிறார் அவர்களுக்கு உதவி வரும் சமூக ஆர்வலர் பி.வி. சாகர்.

சைல்ட்லைன் இந்தியா அறக்கட்டளை உதவியுடன் சிறுமி சனிகாவின் பெற்றோர் இழப்பீடு கோரி திங்கள் கிழமை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தை அணுகினர்.

நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த ஆணையத்தின் செயலாளர் ராஜா வெங்கடாத்ரி, கண்டுகூர் காவல்துறை கண்காணிப்பாளருக்கும், சமூக நலத்துறை நிர்வாக இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அக்டோபர் 14-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். அத்தோடு ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதோடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

பி.சி.பள்ளி காவல்துறை தலைமறைவாக இருக்கும் ஆசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT