இந்தியா

ஜாமீனை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்: சகாபுதீன் மீண்டும் சிறையிலடைப்பு

பிடிஐ

பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சகாபுதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிஹாரில் 2 சகோதரர்களை அமிலத்தில் மூழ்கடித்து கொல்லப்பட்ட வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சகாபுதீனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

அதன்பின் 11 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு சகாபுதீன் ஜாமீனில் வெளியில் வந்தார். இதை எதிர்த்து கொல்லப்பட்ட 3 இளைஞர்களின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஸ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் சகாபுதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்தனர். அத்துடன், பிஹார் போலீஸில் சகாபுதீன் சரணடைய வேண்டும். அல்லது போலீஸார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் இன்னொரு சகோதரர் ராஜீவ் ரோஷன் சாட்சியாக இருந்தார். அவர் அளித்த சாட்சியின்படிதான் சகாபுதீனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், ராஜீவ் ரோஷனும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை விரைந்து முடிப்பதை உறுதி செய்ய பிஹார் அரசு மற்றும் கீழ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து சிவான் நீதி மன்றத்தில் சகாபுதீன் சரணடைந் தார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT