இந்தியா

மதுபானக் கடை ஊழல் | பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் மணிஷ்: மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

செய்திப்பிரிவு

”மதுபானக் கடை ஊழலில் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி, கேஜ்ரிவால் கொள்ளைக்கூட்டத் தலைவர்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.

மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “ மதுபானக் கடைகளுக்கு உரிம ஊழலில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தான் முதல் குற்றவாளி. முதல்வர் கேஜ்ரிவால் கொள்ளைக்கும்பல் தலைவன். இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மணீஷ் சிசோடியா கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினார். அவரது முகமே மாறிப்போனது. மணிஷ் சிசோடியாவை நாம் ஆங்கில உச்சரிப்பில் "Money Shh" என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பணத்தை சேர்த்துக் கொண்டு மவுனமாக இருக்கிறார்.

மணிஷ் அவர்களே, உங்களின் மதுபானக் கடை உரிமை கொள்கையில் தவறேதும் இல்லை என்றால் நீங்கள் அதை திரும்பப் பெறக் காரணம் என்ன? சாராய வியாபாரிகள் மீது உங்களுக்கு என்ன கரிசனம்? நீங்கள் குற்றமற்றவர்கள் என்றால் 24 மணி நேரத்துக்குள் அரவிந்த் கேஜ்ரிவால் தேச மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் “ என்றார்.

பாஜகவுக்கு நாங்கதான் போட்டி: முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் மணிஷ் சிசோடியா, “ சிபிஐ-யால் இன்னும் இரண்டு - மூன்று தினங்களில் நான் கைதாகலாம். அவர்கள் என் கைபேசியையும், மடிக்கணினியையும் எடுத்து சென்றுவிட்டனர்.

நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. உங்களால் எங்களை உடைக்க முடியாது.மத்தியில் ஆளும் பாஜக அரசு கலால் வரி மோசடி குறித்து கவலைப்படவில்லை, அரவிந்த் கேஜ்ரிவாலைப் பற்றி கவலைப்படுகிறது. ஏனெனில் வரும் மக்களவை தேர்தலில் கேஜ்ரிவாலை மோடிக்கு போட்டியாக அவர்கள் பார்க்கின்றனர்.டெல்லி கல்வி மாதிரியைப் பாராட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியும் மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT