இந்தியா

டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் குத்திக் கொலை

அஷோக் குமார்

டெல்லி அருகே குருகிராம் மெட்ரோ ரயில்நிலையத்தில், 32 வயதுப் பெண் ஒருவர் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, ரோகிணியில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பிங்கி. பணியிடத்துக்குச் செல்வதற்காக மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரெனப் பின்னால் இருந்து வந்த ஜிதேந்தர் என்பவர், அவரைப் பல முறைக் கத்தியால் குத்தினார். பிங்கியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள், அவரது உயிர் பிரிந்தது என்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு சில நிமிடங்கள் முன்பு தன் கணவரை செல்போனில் அழைத்த பிங்கி, ஜிதேந்தர் தன்னைப் பின் தொடர்ந்து வருவதாகக் கூறியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, ஜிதேந்தரை பிடித்த பொதுமக்கள் அவரை அடித்து பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

சிர்ஹால் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பிங்கி. அவரை ஆட்டோ ஓட்டுநர் ஜிதேந்தர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

குருகிராமில் உணவுக்கிடங்கு ஒன்றில் வேலை பார்க்கும் பிங்கியின் கணவர் மான்சிங் இதுகுறித்துக் கூறும்போது,

''ஜிதேந்தர் என்னிடமும், பிங்கியிடமும் பல முறை சண்டையிட்டிருக்கிறார். என் மனைவியை என்னிடமிருந்து அழைத்துச் சென்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னால் இது தொடர்பாக ஜிதேந்தருடன் கைகலப்பு ஏற்பட்டது. ஆனால் அதுகுறித்து போலீஸிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை'' என்றார்.

தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்த பிங்கி, மான்சிங்கை மூன்று வருடங்களுக்கு முன்பு மறுமணம் செய்துள்ளார். முதல் திருமணத்தின் மூலம் அவருக்கும் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT