உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம், முசாபர்நகர் மாவட்டம், துல்ஹரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அருகில் உள்ள ஷாபூர் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கும்பல் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அங்குள்ள மயானத்தில் மயங்கி கிடந்த அப்பெண்ணை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உள்ளூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த தலைமை போலீஸ் அதிகாரி ஹிந்த்வீர் சிங் உள்பட 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
சிறுமி மர்மச் சாவு
இதனிடையே குர்தால் என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அண்மையில் காணாமல் போனார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவமும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் ஒரு பெண் பலாத்காரம்
மேலும் உத்தரப் பிரதேசம் சம்பல் பகுதியில் 35 வயது பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் 4 பேரை போலீஸார் தேடி வருகின் றனர்.
பதான் மாவட்டத்தில் 2 சிறுமிகள் அண்மையில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.