இந்தியா

காவிரி நதி நீர் பற்றி விவாதிக்க கர்நாடக சட்டப்பேரவை இன்று அவசர‌மாக கூடுகிறது

இரா.வினோத்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக‌ கர்நாடக சட்டப் பேரவை மற்றும் மேலவை இன்று அவசரமாக கூட்டப்படுகிறது.

கடந்த 30-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து 6-ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி காவிரி நீரைத் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட வேண்டும். வரும் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி நேற்று முன் தினம் விவாதித்தார். அப்போது அனைத்துக்கட்சித் தலைவர்களும் தமிழகத்துக்கு நீரைத் திறக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் கர்நாடக சட்டப்பேரவை யை உடனடியாகக் கூட்டி, சிறப்புத் தீர்மானமும், உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தனிச்சட்டமும் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவை மற்றும் மேலவை இன்று மாலை அவசரமாக கூடுகிறது. கடந்த முறை கர்நாடக அணைகளில் உள்ள நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதைப் போல, இந்த முறையும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT