இந்தியா

31 அக்டோபர் திரைப்படத்தை வெளியிட தடை இல்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பிடிஐ

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ‘31 அக்டோபர்’ என்ற திரைப்படத்தை, மேஜிக்கல் ட்ரீம்ஸ் புரடெக்்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சோஹா அலிகான் மற்றும் வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், இன்று (21ம் தேதி) திரைக்கு வருவதாக அறி விக்கப்பட்டிருந்தது. முன்னதாக, இதன் ‘டிரைலர்’ மற்றும் ‘போஸ்டர்’கள் வெளியிடப்பட்டன.

இவை, நாட்டின் முக்கியமான பழம்பெரும் கட்சியின் கொள்கைக்கு விரோதமாகவும், தற்போதுள்ள அரசியல் தலைவர் வன்முறையை தூண்டுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாகவும் கூறி, இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு, அஜய் கடாரா என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் கொண்ட அமர்வு இம்மனுவை விசாரித்து, திரைப்பட தணிக்கைத் துறையின் விளக்கத்தையும் பெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ’31 அக்டோபர் திரைப்பட ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களைப் பார்க்கும்போது, அவற்றில் ஆட்சேபணைக்குரிய எதுவுமில்லை. மேலும், திரைப்பட தணிக்கை வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT