மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியில் மிதந்து வந்த மர்ம படகு. (அடுத்த படம்) படகில் இருந்து மீட்கப்பட்ட பெட்டியில், 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படங்கள்: பிடிஐ. 
இந்தியா

மகாராஷ்டிராவில் ஆயுதங்களுடன் மிதந்த மர்ம படகு - ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் ராய்காட் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் பகுதியை நேற்று மர்ம படகு நெருங்கியது. இந்த படகு குறித்து போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து படகை ஆய்வு செய்தனர். அதில் இருந்த பெட்டியில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

துணை முதல்வர் விளக்கம்

இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹனா லோர்டோர்கன் என்ற பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் அவரது கணவர் ஜேம்ஸ் உட்பட 4 பேர் கடந்த ஜூன் 26-ம் தேதி மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் படகின் இன்ஜின் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அந்த வழியாக சென்ற கொரிய போர்க் கப்பலில் இருந்த அதிகாரிகள், இருவரையும் மீட்டு ஓமன் நாட்டில் ஒப்படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தம்பதியினரால் கைவிடப்பட்ட படகு மகாராஷ்டிர கடல் பகுதிக்கு வந்துள்ளது. அவர்கள் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களே தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மர்ம படகுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை. மகாராஷ்டிராவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை.

மத்திய புலனாய்வு அமைப்புகளும் மாநில போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலோர காவல் படையினருடன் மாநில போலீஸார் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT