இந்தியா

பெங்களூரு விதானசவுதாவில் பிடிபட்ட ரூ. 2.5 கோடி எடியூரப்பாவுக்கு சொந்தமானதா?- கர்நாடக அரசியலில் பரபரப்பு

இரா.வினோத்

பெங்களூரு விதானசவுதாவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.5 கோடி யாருக்கு சொந்தமானது என கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு நன்கு தெரியும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள‌ விதான சவுதா (கர்நாடக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டிடம்) வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப் போது வழக்கறிஞர் சித்தார்த்தா (40) என்பவரின் காரில் ரூ.2.5 கோடி பணம் சிக்கியது. இது தொடர்பாக விசாரித்த போது, 'எனது பையில் ரூ.70 லட்சம் மட்டுமே உள்ளது. பெங்களூருவில் வீட்டுமனை வாங்குவதற்காக வைத்துள்ளேன்” என்றார் அவர்.

இதையடுத்து கப்பன் பூங்கா போலீஸார் அவரிடம் விசாரித்தனர். மேலும் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 3 நாட்கள் அவகாசம் வழங்கியும் சித்தார்த்தா பணத்துக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே சித்தார்த்தா மீது போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கர்நாடக சட்டப்பேரவையில் இவ்வளவு பெரிய தொகை சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மஜத மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வரு மான குமாரசாமி, “விதானசவுதா வில் பிடிப்பட்ட பணம் அமைச்சர் களுக்கோ, அதிகாரிகளுக்கோ லஞ்சம் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா? இந்தப் பணத்தின் பின்னணியில் பல பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். இந்தப் பணம் யாருடையது, எங்கிருந்து வந்தது என்பது பற்றிய விவரம் முன்னாள் முதல்வரும், பாஜக மாநில தலைவருமான‌ எடியூரப்பாவுக்கு நன்றாக தெரியும்.

இவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் சொன்னால் என் மீது வழக்குகள் போடுவார்கள். கடந்த 2007 வரை என் மீது எந்த வழக்கும் கிடையாது. அதன் பிறகு ப‌ல்வேறு பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால் என்மீது ஏராளமான வழக்குகள் போட்டுள்ளனர். எனவே போலீஸார் உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT