இந்தியா

காஷ்மீரில் இரண்டு நாள்களில் 3 பள்ளிகள் எரிப்பு

செய்திப்பிரிவு

காஷ்மீரில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 3 பள்ளிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி கடந்த ஜூலை 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது. 3 மாதத்துக்கு மேலாகியும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை.

ஹுரியத் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் முழுஅடைப்பு போராட்டத்தை நீட்டித்து கொண்டே வருகின்றனர். இதை மீறி திறக்கப்படும் பள்ளிகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதுவரை 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் தீக்கிரையாகி உள்ளன.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அனந்தநாக் மாவட்டத்தில் 2 பள்ளிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆஷ்முகம் பகுதியில் நேற்று அரசு பள்ளிக்குத் தீ வைக்கப்பட்டது.

பிரிவினைவாதிகளின் சதியால் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வசதி படைத்த பெற்றோர், ஜம்மு பகுதியில் உள்ள பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த் துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்ட முதல்வர் மெகபூபா முப்தி, பள்ளிகளை எரிக்கும் பிரிவினைவாதிகளின் குழந்தைகள் அனைவரும் உயர் கல்வி பயின்று வருகின்றனர், ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு இளைஞர்களைப் படிக்கவிடாமல் தடுத்து அவர்களை படிப்பறிவில்லாதவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதைப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

துப்பாக்கிச் சண்டை

இந்தியா மீது மறைமுகப் போரைத் தொடுக்கும் வகையில் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் உளவுத் துறை தூண்டி வருகிறது. எனவே தீவிரவாதத் தாக்குதல்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குப்வாரா மாவட்ட எல்லைப் பகுதியில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், உள்ளூர் போலீஸார் இணைந்து நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியில் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT