இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

செய்திப்பிரிவு

ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாகிஸ்தான் படைகள் நவுசேரா பகுதியில் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தின. தானியங்கி இயந்திரங்கள், பீரங்கி குண்டுகளை கொண்டு பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. இந்திய தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் படைகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையேயான இந்தச் சண்டை இரவு 1.30 மணிவரை தொடர்ந்தது. இந்தச் சண்டையில் இந்திய தரப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" என்று கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் சதிஷ் குமார்(24) என்ற இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.

எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எச்சரித்திருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்த நாள் முதல், எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இதுவரை 29 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT