பிஹார் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மாஞ்சி, ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் ராப்ரி தேவி ஆகியோர். படம்: பிடிஐ. 
இந்தியா

பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் - ஆர்ஜேடி கட்சியின் 16 பேர் உட்பட 31 பேர் அமைச்சராக பதவியேற்பு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 31 பேர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

பிஹாரில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த 10-ம் தேதி பதவியேற்றனர்.

இந்நிலையில், பிஹார் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. இதில் ஆர்ஜேடியைச் சேர்ந்த 16 பேரும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

முதல்வர் நிதிஷ் குமார் உள்துறையை வைத்துக் கொண்டார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரம், சாலைகள் கட்டுமானம், நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்த போது, அமைச்சர்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரும்பாலானோர் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஃபாக் அலாம் மற்றும் முராரி லால் கவுதம் ஆகிய 2 பேரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் சுமன் என்பவரும் அமைச்சராக பதவி ஏற்றார். இந்த கூட்டணியில் இருந்த ஒரே ஒரு சுயேட்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங்கும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

பிஹாரின் மெகா கூட்டணியில் பலம் தற்போது 164 ஆக உள்ளது. புதிய அரசு சட்டப்பேரவையில் வரும் 24-ம் தேதி தனது பலத்தை நிருபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT