பெங்களூரு ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 
இந்தியா

பெங்களூருவில் முதல் முறையாக ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட்டம்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் சர்ச்சைக்குரிய ஈத்கா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை யில் உள்ள ஈத்கா மைதானம் வக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அண்மையில் கர்நாடக அரசு அந்த மைதானம் பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது என அறிவித்தது.

இதையடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத், ஹனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் அங்குள்ள மசூதி மதில் போன்ற கட்டிடத்தை இடிக்க வேண்டும். அங்கு இந்து அமைப்பினர் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரி வருவதால் சர்ச்சையானது.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெற்றது. போலீஸாரின் அணிவகுப்பைத் தொடர்ந்து, வருவாய்த் துறை உதவி ஆணையர் எம்.ஜி.சிவண்ணா தேசியக் கொடியை ஏற்றினார். இதில் பெங்களூரு மத்திய தொகுதி எம்பி பி.சி.மோகன், சாம்ராஜ்பேட்டை எம்எல்ஏ ஜமீர் அகமது கான், பெங்களூரு மாநகர கூடுதல் காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக் கூறுகையில், ‘‘கடந்த 75 ஆண்டுகளாக ஈத்கா மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. பாஜக அரசின் முயற்சியால் முதல் முறையாக அங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த மக்களும் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர். அதே வேளையில் சில பகுதிகளில் இரு பிரிவினரும் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதால் ஒரு சில தினங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கும்'' என்றார்.

SCROLL FOR NEXT